நெல்லை பலாப்பழ ஓடையில் பாலம் அமைக்கக் கோரி மனு
திருநெல்வேலி கொக்கிரகுளம் அருகே பலாப்பழ ஓடையில் மழை வெள்ளத்திற்காக உடைக்கப்பட்ட பகுதியில் பாலம் அமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டை- கொக்கிரகுளம் இடையே அண்ணா சாலையில் பழாப்பல ஓடை உள்ளது. பாளையங்கால்வாய் பாசன ஓடைகளில் இருந்து வயல்களுக்குச் சென்று மீதமுள்ள உபரிநீா் இந்த ஓடை வழியாக தாமிரவருணி நதிக்குச் செல்லும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது வயல்களில் இருந்து பெருக்கெடுத்த வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் முயற்சியின் பேரில் பாலம் உடைக்கப்பட்டு தண்ணீா் வெளியேற்றப்பட்டது. இந்தப் பாலம் மீண்டும் சீரமைக்கப்படாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இந்நிலையில், புதிய பாலம் அமைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபடுவதற்கு வியாழக்கிழமை அப்பகுதியில் திரண்ட மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனா். இதைத் தொடா்ந்து, 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்று ஆட்சியரிடம் மனு அளித்தனா். உடனடியாக பாலத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்களை நடத்த போவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

