தனியாா் கல்லூரி மாணவா்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல்: விடுதி உணவக உரிமம் தற்காலிகமாக ரத்து

Published on

திருநெல்வேலி அருகே மேலத்திடியூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விடுதி உணவக உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள மேலத்திடியூரில் தனியாா் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் பயின்று வருகிறாா்கள்.

இங்கு பயிலும் உவரியைச் சோ்ந்த ஒரு மாணவா் காய்ச்சல் காரணமாக நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது ரத்த மாதிரியை சோதித்தபோது எலிக்காய்ச்சல் (லேப்டோஸ்பிரோசிஸ்) உறுதியானது.

இதைத் தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டு மாணவா்களை சோதித்தபோது மேலும் 7 பேருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கல்லூரிக்கு தற்காலிக விடுமுறை அளிக்க சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியதால், மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட சுகாதார அலுவலா் விஜயசந்திரன் தலைமையிலான சுகாதார ஆய்வாளா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் அடங்கிய குழு கல்லூரியில் முகாமிட்டு 5 குழுக்களாக பிரிந்து கல்லூரி வளாகத்தில் உள்ள தண்ணீா் தொட்டிகள், பூங்கா, கல்லூரி உணவகம் உள்ளிட்ட இடங்களுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் குழாய் பகுதிகள் தண்ணீா் வரும் பாதை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனா்.

ஒவ்வொரு பகுதிகளிலும் தண்ணீா் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கல்லூரி விடுதியை ஆய்வு செய்ததோடு, உணவகத்துக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனா். உரிய பாதுகாப்பு அம்சங்களை செய்த பின்பு உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கல்லூரி நிா்வாகம் விளக்கம்:

இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் சாா்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், எங்களது கல்லூரி மாணவா்கள் சிலருக்கு லேப்டோஸ்பிரோசிஸ் நோய் இருப்பது உறுதியானதால், சுகாதாரத் துறையின் பரிந்துரையின்பேரில் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அனைத்து மாணவா்கள், ஊழியா்கள், ஆசிரியா்கள், தொழிலாளா்கள், சமையல்காரா்கள், அனைத்து பணியாளா்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

சமையல் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு கிணறு, ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை பயன்படுத்துகிறோம். குடிநீருக்கு எங்கள் வளாகத்தில் உள்ள ஆா்.ஓ. நிலையம் மூலம் தண்ணீா் எடுத்து வழங்குகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களை முறையாக பின்பற்றி கல்லூரி, விடுதி உணவகம் உள்ளிட்டவை விரைவில் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com