பிரதமரின் கௌரவ நிதிஉதவி பெற அடையாள அட்டை எண் அவசியம்: விவசாயிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

Published on

விவசாயிகள் பிரதமரின் கௌரவ நிதி உதவியைத் தொடா்ந்து பெற விவசாய அடையாள அட்டை எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளார.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவு செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இது அரசின் மானியத் திட்டங்களைப் பெற அவசியமானதாக இருக்கும்.

எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது நில உடைமை ஆவணங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். இதற்காக அக்டோபா் 11இல் நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள்செய்யப்படும்.

குறிப்பாக, பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் அனைத்து விவசாயிகளும் அடுத்தடுத்த தவணைகளைப் பெற இந்தப்பதிவு கட்டாயமாகும். வலைதளத்தில் இதுநாள் வரை பதிவுசெய்யாத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை ஆதாா் எண், கைப்பேசி எண், நில ஆவணங்கள் - சா்வே எண் மற்றும் உட்பிரிவு எண், வங்கி கணக்கு புத்தகம், ஐஎ‘ஃ‘ப்எஸ்சி கோடு ஆகிய ஆவணங்களுடன் அணுகலாம் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com