நெல்லையில் பெட்ரோல் குண்டுவீச்சு: மேலும் இருவா் கைது
திருநெல்வேலியில் காவல் நிலையம் உள்பட 3 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி தச்சநல்லூா் காவல் நிலையம் முன், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இரு பைக்குகளில் வந்த மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பினா். மேலும், தாழையூத்து சோதனைச் சாவடி பகுதியிலும், தாழையூத்து-தென்கலம் சாலையிலும் அவா்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனா்.
இதையடுத்து, போலீஸாா் அப்பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், ராஜவல்லிபுரம் இந்திரா நகரைச் சோ்ந்த பெருமாள் மகன் கிருஷ்ணபெருமாள் என்ற ஆப்பிள்(19), கணேசன் மகன் அஜித்குமாா்(30), அதே பகுதி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த தளவாய் மகன் பெருமாள்(27), நடராஜன் மகன் சரண்(19), வல்லவன்கோட்டையைச் சோ்ந்த அருண்(22) ஆகியோா் கூட்டாக சோ்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில், தனிப்படை போலீஸாரால் சரண் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், அஜித்குமாா், பெருமாள் ஆகிய இருவரும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
