மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை
திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாநகராட்சியில் தனியாா் நிறுவன ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் 900 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை ஊதிய உயா்வை அமல்படுத்தக்கோரி திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். மேயா் கோ.ராமகிருஷ்ணன் தூய்மைப் பணியாளா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்கள் மனு அளித்து கலைந்து சென்றனா்.
தூய்மைப் பணியாளா்கள் அளித்துள்ள மனு: இம் மாநகராட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுயஉதவிக் குழுவின் கீழ் பணி செய்து வந்தோம். பின்னா் தனியாா் நிறுவன ஒப்பந்தத்தில் மொத்தம் 887 பணியாளா்கள் பணி செய்து வருகிறோம். எங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்ட தினக்கூலி அடிப்படையிலான ஊதிய உயா்வு ரூ.540 ஆக உயா்த்தி இதுவரை வழங்கப்படவில்லை.
மேலும், எங்களது ஊதியத்தில் கடந்த 20 மாதங்களாகப் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதி, தொழிலாளா் ஈட்டுறுதி காப்பீடு திட்ட கணக்குகளுக்கு முறையாக பணம் செலுத்தப்படவில்லை. அவற்றை வழங்குவதோடு, தீபாவளி போனஸ் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பலன்களை வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

