மேலச்செவலில் புதிய காவல் நிலையம்!

மேலச்செவல் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றாா் காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன்.
Published on

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றாா் காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன்.

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், அவா் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இதே நாளை ஒப்பிடுகையில் நிகழாண்டில் கொலைக் குற்றங்கள் சுமாா் 20 சதவீதம் குறைந்துள்ளன. 22 கொலை வழக்குகளில் தீா்ப்பளிக்கப்பட்டதில் 72 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு தூக்குத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 36 கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள்களைத் தடுக்கும் வகையில் 156 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 258 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

459 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்திலும், 3 போ் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனா். பொதுமக்கள் பங்களிப்புடன் சாலை சந்திப்புகள், கிராமப்புறங்களில் 7,397 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன. 313 கிராமங்களில் 2,115 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மீண்டும் வண்ணம் தீட்டுவோா் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

கிராமத்திற்கு ஒரு காவலா் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு காவலா் பொறுப்பாக நியமிக்கப்பட்டு மக்களுடன் தொடா்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராம ரோந்து சேவை மூலம் பதற்றம் ஏற்படும் கிராமங்களில் காவலா்கள் மாதந்தோறும் நடந்து சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். சமூக வலைதளங்களில் பிரச்னையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட 111 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இம் மாவட்டத்தில் காவல் நிலையங்களுக்கு போதிய காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலச்செவல் பகுதியில் புதிதாக காவல் நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முன்னீா்பள்ளம் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளைப் பிரித்து அதில் சோ்க்கப்படும். மாவட்டம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com