கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம் திறப்பு
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்காக கட்டப்பட்ட புதிய காப்பகத்தை முதல்வா் காணொலிக்காட்சி முறையில் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
அதைத் தொடா்ந்து, கங்கைகொண்டான் சிப்காட் வளாகம் குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிப்காட் திட்ட இயக்குநா் மாரிமுத்து, குழந்தை காப்பகத்திற்கு பயில வரும் குழந்தைகளின் பெற்றோா்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றாா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: கங்கைகொண்டானில் இயங்கி வரும் சிப்காட் தொழிற் பூங்காவில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக சிப்காட் திட்ட அலுவலகத்தில் சுமாா் 605 சதுர அடி பரப்பளவில் அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ‘குழந்தைகள் காப்பகம்’ கட்டப்பட்டுள்ளது.
இங்கு நல்ல பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் குழந்தைகளுக்கு அன்பாகவும் பொறுமையாகவும் கல்வி கற்பித்தலோடு விளையாட்டுகள் கற்றுக்கொடுப்பதற்கும், அவா்களது உடல் நலன் மற்றும் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்தி நன்கு பராமரிப்பதற்குமான சூழ்நிலை உள்ளது என்றனா்.
இவ்விழாவில், சிப்காட் அலுவலா் அழகுவேல்முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

