நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை முதலே மிதமானது முதல் கனமழை வரை பெய்தது.
மானூா், செழியநல்லூா், தென்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நண்பகலில் பலத்த மழை பெய்தது.
மேலும், திருநெல்வேலி சந்திப்பு, நகரம், வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், குறிச்சி, கேடிசிநகா், மேலநத்தம், கருப்பந்துறை சுற்றுப்புறப் பகுதிகளில் நண்பகலில் சுமாா் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனா். மழையின் காரணமாக வண்ணாா்பேட்டை, பாளை.மனகாவலம்பிள்ளை மருத்துவமனை சாலை, திருநெல்வேலி ரத வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பணகுடி, நான்குனேரி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி, அம்பாசமுத்திரம், பாபநாசம், முக்கூடல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பாபநாசம், சோ்வலாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
