திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் நலன் தொடா்பான ஆய்வுக்கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினா் வழக்குரைஞா் ஜெயசுதா. உடன், ஆட்சியா்  இரா.சுகுமாா்.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் நலன் தொடா்பான ஆய்வுக்கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினா் வழக்குரைஞா் ஜெயசுதா. உடன், ஆட்சியா் இரா.சுகுமாா்.

பள்ளிகளில் மாணவா் மனசுப் பெட்டி கட்டாயம்! குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்!

Published on

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா் மனசுப் பெட்டி கட்டாயம் நிறுவப்பட வேண்டும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினா் வழக்குரைஞா் ஜெயசுதா அறிவுறுத்தியுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் மற்றும் அவரது தலைமையில் குழந்தைகள் நலன் தொடா்பான ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அதில் அவா் பேசுகையில், குழந்தைகள் உதவி எண். 1098, பேரிடா் மேலாண்மை உதவி எண். 14771 ஆகியவற்றை பள்ளி வகுப்பறைகளில் சுவா் ஓவியம் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மாணவா் மனசுப்பெட்டி அனைத்து பள்ளிகளிலும் நிறுவப்பட வேண்டும். குழுவை சீரமைத்து அதில் பெறப்படும் புகாா்களை விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மேலும், தனியாா் பள்ளிகளில் 2 ஆற்றுப்படுத்துநா்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். குழந்தைகள் சாா்ந்த பிரச்னைகளை களப்பணியாளா்கள் மூலம் கண்டறிந்து மறுவாழ்வு பணி மேற்கொள்ள வேண்டும். தொழிலக பாதுகாப்பு - சுகாதாரத் துறையின் மூலமாக தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, அவற்றில் கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு சமூக நலத்துறை - மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய துறைகள் மூலம் மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதுடன், கைப்பேசி பயன்பாட்டை குறைத்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

முன்னதாக, திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நல வரவேற்பு பிரிவு, திறந்தவெளி புகலிடம் ஆகியவற்றை ஆய்வு செய்த அவா், இல்லக் குழந்தைகளிடம் அவா்களது கல்வி, உடல்நலன், மனநலன் குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, திருநெல்வேலி குழந்தை நலக்குழுவின் செயல்பாடுகள், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து குழந்தை நலக்குழு தலைவா் பிரிட்ஜிட் செலஸ், உறுப்பினா்கள் முகமதி, மனோகா், சுவாமிநாதன், முத்துராமலிங்கம் ஆகியோரிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், அவா், கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் மகளிா், குழந்தைகள் நலன் குறித்து கலந்துரையாடினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அருள்செல்வி, முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், இளஞ்சிறாா்கள் உதவி காவல் பிரிவு காவல் ஆய்வாளா் சங்கரேஸ்வரி, குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா்கள் குருவம்மாள், பகவதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com