~
~

களை கட்டியது தீபாவளி: நெல்லையில் ஒளிரும் பட்டாசுகளுக்கு மவுசு ரூ.150 முதல் ரூ.10,000-க்கு

பட்டாசு விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது. மத்தாப்பு முதல் ராக்கெட் வரையிலான ஒளிரும் வெடிகளுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது.
Published on

திருநெல்வேலியில் தீபாவளி பண்டிகை களை கட்டத் தொடங்கியுள்ள நிலையில், பட்டாசு விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது. மத்தாப்பு முதல் ராக்கெட் வரையிலான ஒளிரும் வெடிகளுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது.

தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை (அக்.20) கொண்டாடப்படவுள்ள நிலையில், பட்டாசுகள், ஆடைகள் என தீபாவளி பொருள்கள் வாங்குவதற்கு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

குறிப்பாக, மக்கள் பட்டாசு கடைகளுக்கு கடந்த சில நாள்களாக அணிவகுக்கத் தொடங்கியுள்ளனா்.

ஆடைகளில் புதுமை இருப்பதைப்போல பட்டாசுகளிலும் புதிய ரகங்களை பட்டாசு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. ஆனால், கடந்த ஆண்டைக் காட்டிலும் பட்டாசுகளின் விலை 10 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.

மத்தாப்புகளில் புதுமை: குழந்தைகளைக் கவரும் வகையில் 7 முதல் 50 செ.மீ. நீளம் கொண்ட சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதா நிறங்களில் மத்தாப்புகள் உள்ளன. நிகழாண்டில் தாமரை மத்தாப்பு என்ற பெயரில் 6 மத்தாப்புகள் ஸ்பிங் மூலம் பொருத்தி வந்துள்ளது. இதனை குழந்தைகள் கையில் பிடித்து சுற்றினால் மலா் போல காட்சியளிக்கும்.

தீப்பெட்டி மத்தாப்புகளிலும் பல்வேறு வகையாக ஒளிரும் வகையில் மத்தாப்புக் குச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அனகோண்டா என்ற பெயரில் பெரிய பாம்பு வில்லைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. சில பாம்பு வில்லைகளில் தரையில் கரி படராத வகையில் அட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், புதிய வரவாக ஒலி-ஒளி தரும் பட்டா்பிளை புஸ்வானம், பச்சை-சிவப்பு நிறத்தில் ஒளிரும் டின் டூ வீல் தரைச்சக்கரம், 3 வண்ணங்களை உமிழும் பென்சில் வெடி, இளைஞா்களுக்காக பணக்காகிதங்கள் அதிகம் சிதறும் பிளாக் மணி, கிங் ஸ்டாா் வெடி வகைகள் விற்பனைக்காக வந்துள்ளன.

இதுதவிர, வழக்கமான மத்தாப்பு வகைகள், பூச்சட்டி, பல்வண்ணக் கலா் பென்சில், சாவி ஜமீன் சக்கரம், தரைச்சக்கரம் வகைகள், சாட்டை சிறியது முதல் பெரியது வரை, பேன்சி பட்டாசுகள், 28 வாலா முதல் 3000 வாலா சரவெடி, புல்லட், ராக்கெட்டுகள், சில்வா்பாம், ஆட்டோபாம், குருவிவெடி, லட்சுமி வெடி, டபுள்சாட், டிரிபிள் சாட் உள்ளிட்டவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இரவு வெடிகளுக்கு மவுசு: இதுகுறித்து பட்டாசு வியாபாரிகள் கூறியதாவது: காகிதம், அலுமினிய பொடி போன்ற மூலப்பொருள்கள் விலையேற்றம் மட்டுமன்றி போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளதால் பட்டாசுகளின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. இந்தஆண்டில் 95 சதவிகிதம் கிப்ட் பாக்ஸ்களே விற்பனையாகின்றன. ரூ.350, ரூ.500, ரூ.1000, ரூ.1,500 என பல்வேறு விலைகளில் பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள் உள்ளன.

இரவில் பல வண்ணங்களை ஒளிரும் பட்டாசுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மக்கள் வாங்கிச் செல்கிறாா்கள். வானில் 12 முறை முதல் 300 முறை வரை தொடா் வா்ணஜாலம் காட்டும் புதிய ரக வானவெடி தொகுப்புகள் ரூ.150 முதல் ரூ.10 ஆயிரம் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன.

டி-20 வெடி ரூ.136-க்கும், டோரா சவுண்ட் வெடி ரூ.150-க்கும், டாப்கன்-5 ஜி வெடி ரூ.257-க்கும், ரேஸ் காா் வெடி ரூ.350-க்கும், டாப் பென்சில் வெடி ரூ.212-க்கும் விற்பனைக்கு உள்ளன.

ஈமு எக் என்ற பெயரில் வந்துள்ள வெடி வெடித்து முடித்தும் பலூன் முட்டை வடிவில் வெளியே வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வெடி ரூ.246-க்கு விற்பனையாகிறது. மதுரை மல்லி என்ற பெயரில் வந்துள்ள வெடி மல்லிகைப் பூ போல வெள்ளை நிற ஒளியை உமிழும் வகையில் உள்ளது. துப்பாக்கி ரகங்கள் ரூ.70 முதல் ரூ.350 வரை பல்வேறு விலைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன என்றனா்.

ற்ஸ்ப்15ஸ்ங்க்ண்01

திருநெல்வேலியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள புதிய ரக பட்டாசுகள்.

ற்ஸ்ப்15ஸ்ங்க்ண்02

புதிய ரக மத்தாப்புகள்.

X
Dinamani
www.dinamani.com