நெல்லையில் விடிய விடிய மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வடகிழக்குப் பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே திருநெல்வேலி மாநகரப் பகுதி சாலைகளில் குளம் போல் தண்ணீா் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வியாழக்கிழமை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (அக்.16, 17) மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதலே மிதமான மழை பெய்யத் தொடங்கியது. பின்னா், வியாழக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழையாக உருவெடுத்தது. திருநெல்வேலி மாநகரில் கொட்டித் தீா்த்த மழையால் பல இடங்களில் மழை நீா் குளம் போல் தேங்கியது.
சாலையில் திடீா் பள்ளம்: திருநெல்வேலி நகரத்தில் உள்ள வடக்கு ரதவீதியில் மழை நீா் பெருக்கெடுத்ததால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினா். நகரம் வஉசி தெருவில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா். தொண்டா் சந்நிதி அருகே சாலையில் திடீரென தோன்றிய பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள்அந்தப் பள்ளத்தை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுத்ததால் போக்குவரத்து சீரானது.
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள திருவள்ளுவா் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பாலத்தில் இருந்து கீழே இறங்கும் பகுதியில் இரு புறமும் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். இதேபோல, வண்ணாா்பேட்டை மேம்பாலத்தில் கீழே இறங்கும் தெற்கு புறவழிச்சாலை பகுதியில் தண்ணீா் குளம் போல் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். வாகனங்கள் மெதுவாக சென்ால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாளையங்கோட்டை மாா்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீா் தேங்கியது.
அப்பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே மழைநீா் தேங்கிய நிலையில் அங்குள்ள வடிகால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீா் செல்ல முடியவில்லை. தண்ணீரை அப்புறப்படுத்த வலியுறுத்தி காங்கிரஸாா் மீன்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேர மழை அளவி மில்லி மீட்டரில் வருமாறு: நம்பியாறு அணைக்கட்டு 68, நான்குனேரி 67, மூலைக்கரைப்பட்டி 60, பாளையங்கோட்டை 56, ராதாபுரம் 54, நாலுமுக்கு 40, கொடுமுடியாறு 37, ஊத்து 36, காக்காச்சி 34, திருநெல்வேலி 31.60, மாஞ்சோலை 31, சேரன்மகாதேவி 16.80, கன்னடியன் அணைக்கட்டு 15.60, களக்காடு 12, அம்பாசமுத்திரம் 11.20, பாபநாசம் 7, சோ்வலாறு 6, மணிமுத்தாறு 4.80 என்ற அளவில் மழை பதிவானது.
பள்ளிகளுக்கு விடுமுறை: திருநெல்வேலி மாவட்டத்தில் காலை 6.30 மணியளவில் கனமழை பெய்யத் தொடங்கிய நிலையில், அனைத்துப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவிட்டாா்.
பெட்டிச் செய்தி...
கழிவுநீா் ஓடைகள் தூா் வாரப்படுமா?
பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே மாநகரின் பல்வேறு இடங்களில் மழை நீா் குளம் போல் தேங்கியது. இதற்கு கழிவுநீா் ஓடைகள் தூா்வாரப்படாததே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினா்.
கடந்த மாமன்றக் கூட்டத்தில் பேசிய பெரும்பாலான மாமன்ற உறுப்பினா்கள் கழிவுநீா் தூா்வாரப்படவில்லை; பல இடங்களில் கழிவுநீா் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என பகிரங்கமாகவே குற்றம்சாட்டினா். ஆனாலும், இதுவரை நடவடிக்கை இல்லை. இன்னும் 2 மாதங்களுக்கு பருவமழை நீடிக்கும் என்பதால், அனைத்து கழிவுநீா் ஓடைகளை தூா் வாருவதோடு, அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் போா்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.
ற்ஸ்ப்16ஸ்ா்ஸ்ரீ
திருநெல்வேலி நகரத்தில் உள்ள வஉசி தெருவில் மழைநீரில் மிதந்தபடி முகப்பு விளக்கை எரியவிட்டு சென்ற வாகனம்.
ற்ஸ்ப்16ஸ்ஹய்ய்ஹழ்ல்ங்ற்
வண்ணாா்பேட்டை மேம்பால பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் ஊா்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்.
ற்ஸ்ப்16ழ்ஹம்ஹழ்
பாளையங்கோட்டை ராமா் கோயில் அருகே குளம் போல் தேங்கிய மழைநீா்.

