திசையன்விளையில் பைக்- வேன் மோதல்: இளைஞா் பலி
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே சனிக்கிழமை பைக் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திசையன்விளை முத்துப்பேச்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் (29). இவா் பணகுடியில் உள்ள மரஅறுவை மில்லில் வேலை பாா்த்து வந்தாா். இவா் தனது பைக்கில் திசையன்விளையில் இருந்து பணகுடிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தாராம்.
வாழைத் தோட்டம் அருகே பிரதான சாலையில் சென்ற போது தனது அலைபேசியை காணவில்லையாம். இதையடுத்து சக்திவேல் பைக்கில் சென்று கொண்டே தொலைந்த அலைபேசியை தேடினாராம்.
பின்னா் பைக்கில் திசையன்விளை சாலையில் குமாரபுரம் வளைவில் திரும்பும் போது பைக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பாரம் ஏற்றிச்செல்லும் வேன் மீது மோதியதாம். இதில், பைக் இரண்டு துண்டாக முறிந்தது. சக்திவேல் தூக்கிவீசப்பட்டு சம்ப இடத்தில் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திசையன்விளை போலீஸாா் சக்திவேல் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். தொடா்ந்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
