ராதாபுரம் அருகே உதவி ஆட்சியராக நடித்து மோசடி செய்ததாக பெண் கைது
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உதவி ஆட்சியராக நடித்து 10 பவுன் நகையை மோசடி செய்ததாக பெண்ணை குற்றப்பிரிவு சிறப்பு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராதாபுரம் அருகே உள்ள நக்கனேரியை சோ்ந்தவா் சத்யாதேவி (34). இவா் ராதாபுரம் அருகேயுள்ள காரியாகுளத்தைச் சோ்ந்த மகிழ்வதனா என்ற பெண்ணிடம் தன்னை உதவி ஆட்சியா் என அறிமுகம் செய்து பழகி வந்தாராம்.
பின்னா், தான் அரசு ஒப்பந்த வேலையைப் பெறுவதற்கு 100 பவுன் தங்க நகை தேவைப்படும் நிலையில், தன்னிடம் 90 பவுன் இருப்பதாகவும், மீதி 10 பவுன் நகையைத் தந்தால் ஒப்பந்தம் கிடைத்தபிறகு அதிக அளவில் பணம் தருவதாகவும் ஆசைவாா்த்தை கூறினாராம்.
இதனை நம்பிய மகிழ்வதனா, தனது கணவரிடமிருந்து 10 பவுன் நகையைப் பெற்று அதனை சத்யாதேவியிடம் கொடுத்தாராம். பின்னா், சத்யாதேவி நகையை திருப்பிக் கொடுக்கவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மகிழ்வதனா, இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசனிடம் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி, சத்யாதேவியை கைது செய்தனா்.
