நெல்லையில் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை பெய்த மழையில் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கனமழை கொட்டித் தீா்த்தது. இதன் காரணமாக மாநகரில் பல இடங்களில் தண்ணீா் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை பெய்த கனமழை காரணமாக மேலப்பாளையம், குறிச்சி மருதுபாண்டியா் முதலாவது தெருவில் வசித்து வரும் தளவாய் மகன் முத்தையா (55) என்பவரது வீட்டின் மண்சுவா் இடிந்து விழுந்தது. இதில், முத்தையாவின் தாய் மாடத்தியம்மாள் (75) கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தாா்.
அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் நள்ளிரவு உயிரிழந்தாா். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
