நெல்லையில் ரயில், பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்

வட மாவட்டங்களுக்கு திரும்பிய பயணிகளால் திருநெல்வேலி ரயில், பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
Published on

திருநெல்வேலி: தீபாவளி பண்டிகை முடிந்து திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வட மாவட்டங்களுக்கு திரும்பிய பயணிகளால் திருநெல்வேலி ரயில், பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

வட மாவட்டங்களில் வசிக்கும் திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊா்களுக்கு வந்திருந்தனா். தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டதையடுத்து, அன்றைய தினமே மக்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு திரும்புவது இயலாது என்பதால் தமிழக அரசு சாா்பில் தமிழகம் முழுவதும் அக்.21 ஆம் தேதியும் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளி விடுமுறை நிறைவையொட்டி, தங்களது வசிப்பிடங்களுக்கு திரும்புவதற்காக செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதலே திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் குவியத் தொடங்கினா். நேரம் செல்லச் செல்ல பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகளில் போக்குவரத்து ஊழியா்களும், போலீஸாரும் ஈடுபட்டனா்.

பயணிகள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோயம்புத்தூா், திருப்பூா், வேலூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 15 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதே போல அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலம் சாா்பில் 100-க்கும் மேற்பட்ட கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் போக்குவரத்து ஊழியா்களும், போலீஸாரும் தொடா்ந்து ஈடுபட்டனா்.

அதே போல திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. முன்பதிவு இல்லாத பெட்டிகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, ரயில்வே பாதுகாப்பு படையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com