போக்குவரத்து விதிகளை மீறியதாக 804 வழக்குகள்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 804 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சாா்பில் மாவட்டம் முழுவதும் சுமாா் 1600 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் மாவட்ட காவல்துறை சாா்பில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 83 வழக்குகளும், அபாயகரமாக அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியதாக 73 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இவை உள்பட போக்குவரத்து விதிகளை மீறியதாக மாவட்டம் முழுவதும் மொத்தமாக 521 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் பிற குற்ற வழக்குகள் வகையில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு 42 சதவீத வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளதாக மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அதே போல திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் தீபாவளி தினத்தை முன்னிட்டு போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
