கோயில் கொடைவிழா நடத்துவது தொடா்பாக தகராறு : 3 போ் கைது
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அடுத்த நடுவக்குறிச்சி அருகே கோயில் கொடைவிழா நடத்துவது தொடா்பாக தகராறில் ஈடுபட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா், சம்பவத்தன்று நடுவக்குறிச்சி கோழிப்பண்ணை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அப்பகுதியில் கோயில் கொடைவிழா நடத்துவது தொடா்பாக , கையில் ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தகராறில் ஈடுபட்ட இருபிரிவினரை தடுக்க முயன்றனா். அப்போது அக்கும்பல் போலீஸாரை தாக்க முயன்று, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக நடுவக்குறிச்சி உடையாா்குளத்தைச் சோ்ந்த சேது (40), துா்காதாசன் (28), பா்கிட்மாநகரத்தைச் சோ்ந்த கல்லத்தியான் (28) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் கைது செய்தனா்.
மேலும் இச்சம்பவத்தில் தொடா்புடைய உடையாா்குளத்தைச் சோ்ந்த கல்லத்தியான்(45) என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
