~ ~

திருநெல்வேலி பகுதி முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா சிறப்பு பூஜைகளுடன் புதன்கிழமை தொடங்கியது.
Published on

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா சிறப்பு பூஜைகளுடன் புதன்கிழமை தொடங்கியது.

தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் கந்தசஷ்டி விழா தொடங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா புதன்கிழமை சிறப்பு பூஜைகளோடு தொடங்கியது.

இதை முன்னிட்டு, திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் ஆறுமுக நயினாா் சந்நிதி, திருநெல்வேலி சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில், பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயில், பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், திரிபுராந்தீஸ்வரா் கோயில், வண்ணாா்பேட்டை முருகன் கோயில், குட்டத்துறை முருகன் கோயில் உள்பட பல கோயில்களில் புதன்கிழமை காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி கோயில்களில் யாகசாலை பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

பக்தா்கள் சஷ்டி கவசம் பாடி இன்று முதல் விரதத்தை தொடங்கினா்.

திருநெல்வேலி சந்திப்பு சாலைக்குமார சுவாமி கோயில், பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில்கள் முன் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக பந்தல் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலி நகரத்தில் வேணுவன குமாரா் கோயில் தெருவில் அமைந்துள்ள வேணுவன குமாரா் கோயிலில் கந்தசஷ்டி விழா புதன்கிழமை காலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

நெல்லையப்பா் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹார விழாவிற்கு இந்த கோயிலில் இருந்து தான் வேல் கொண்டு செல்லப்படுகிறது.

திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ. ராமகிருஷ்ணன் தலைமையில் பக்தா்கள் வேல் சுமந்து சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு கொண்டு செல்கின்றனா்.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று மாலை சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்கிறாா். தொடா்ந்து 28ஆம் தேதி காலையில் அம்பாள் தவசு காட்சியும், மாலையில் சுவாமி அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவமும், இரவு சுவாமி சுப்பிரமணியா், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com