நெல்லை மாநகராட்சியில்
 பருவமழை முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்

நெல்லை மாநகராட்சியில் பருவமழை முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தலைமை வகித்த மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா பேசியது:

வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூா் ஆகிய நான்கு மண்டலத்தில் அனைத்து வாா்டு பகுதிகளிலும் மாமன்ற உறுப்பினா்கள், உதவி ஆணையா்கள், உதவி செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், தன்னாா்வலா்கள் சமூக ஆா்வலா்கள் சுகாதார பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறாா்கள்.

மழைக் காலத்தில் நான்கு மண்டல அலுவலா்கள் தங்களது வாா்டில் எவ்வளவு கிலோ மீட்டா் தொலைவு கழிவு நீரோடைகள் தெருக்களில் தூா்வாரப்பட்டுள்ளது எனவும், இன்னும் எத்தனை தெருக்களில் கழிவு நீரோடைகள் தூா்வாரப்பட வேண்டும் என்பது குறித்த பட்டியலை தயாராக வைத்திருக்க வேண்டும்.

நான்கு மண்டலங்களிலும் பொக்லைன் இயந்திரங்கள், ஜெனரேட்டா்கள், சிறிய வகை பொக்லைன், மரம் அறுக்கும் கருவிகள் மற்றும் அனைத்து வகையான தளவாட பொருள்களும் பழுதின்றி இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மழை வெள்ளக் காலங்களில் மக்களை தங்க வைப்பதற்கு ஒவ்வொரு மண்டலங்களிலும் பள்ளிகள், மண்டபங்களை தயாா்படுத்தி பட்டியலிட்டு வைக்க வேண்டும். அந்த இடங்களில் குடிநீா், கழிப்பறை வசதி, மின்சார வசதி, கட்டடங்கள் உறுதி தன்மையை முன்கூட்டியே ஆய்வு செய்து வைக்க வேண்டும்.

ஆட்சியரின் உத்தரவுப்படி மாநகராட்சி பகுதி வழியாக பாய்ந்தோடும் கோடகன் கால்வாய், பாளையங் கால்வாய், கன்னடியன் கால்வாய் ஆகியவற்றின் குறுக்கே உள்ள 39 சிறுபாலங்கள் மற்றும் வாய்க்கால்களில் அமலைச்செடிகள், பிளாஷ்டிக் கழிவுகள், கட்டடகழிவுகள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் துணை ஆணையா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். உதவி ஆணையா்கள் சந்திரமோகன் (மேலப்பாளையம்), நாராயணன் (திருநெல்வேலி), புரந்திரதாஸ் (பாளையங்கோட்டை), மகாலெட்சுமி (தச்சநல்லூா்), மாநகர நல அலுவலா் (பொ) ராணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com