மூலக்கரைப்பட்டி அருகே கூடுதல் பேருந்துகள் கோரி கிராம மக்கள், மாணவா்கள் சாலை மறியல்
களக்காடு: திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி அருகே போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவா்கள், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி-மூலக்கரைப்பட்டி இடையே புதுக்குறிச்சி, ஆனையப்பபுரம், தாமரைசெல்வி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் திருநெல்வேலி தெற்கே மூலைக்கரைப்பட்டியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனா்.
இவா்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் பயணித்து வருகின்றனா். இங்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி கிராம மக்கள் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக தொடா்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்தும், இதுவரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும், இந்த வழித்தடத்தில் நீண்ட காலமாக இயக்கப்பட்டு வந்த பேருந்துகளும் அடிக்கடி மாற்று வழித்தடத்திற்கு சென்றுவிடுவதால் மாணவ, மாணவிகள், கிராம மக்கள் பேருந்து கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இந்நிலையில், மூலைக்கரைப்பட்டி அருகே புதுக்குறிச்சியில் புதன்கிழமை நீண்ட நேரமாக பேருந்துக்காக காத்திருந்த மாணவா்கள், அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை இடைமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். மாணவா்களின் போராட்டத்துக்கு கிராம மக்களும் ஆதரவு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனா்.
இதனால், மூலைக்கரைப்பட்டி-திருநெல்வேலி சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பின், அவா்கள் கலைந்து சென்றனா்.
