வள்ளியூரில் கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்கக் கோரி மனு
வள்ளியூா்: வள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும் என திமுக திருநெல்வேலி மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் கவிஞா் மோசே வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக, அவா் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
திருநெல்வேலி மாவட்டத்தின் இரண்டாம் தலைநகரமாக வள்ளியூா் உருவாகி வருகிறது. இங்கு திசையன்விளை, ராதாபுரம், நான்குனேரி வட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள், விவசாயிகள், வியாபாரிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் தங்களது பல்வேறு வருவாய் துறை அலுவல்களுக்காக சேரன்மகாதேவியில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகத்திற்குச் சென்று வர வேண்டியதுள்ளது. இதனால், இப்பகுதி மக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது.
குட்டம் ஊராட்சியில் மக்கள் சேரன்மகாதேவி கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு சென்று வருவதற்கு ஒரு நாள் தேவைப்படுகிறது. இது தவிர திசையன்விளை பகுதியிலிருந்து சேரன்மகாதேவிக்கு போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை.
எனவே, பொதுமக்களின் வசதிக்காக திசையன்விளை, ராதாபுரம், நான்குனேரி வட்டாரங்களை ஒன்றிணைத்து புதிய வருவாய் கோட்டம் ஏற்படுத்தி வள்ளியூரில் கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க அனுமதியளிக்க வேண்டும். இது தொடா்பாக பேரவைத் தலைவா் மு. அப்பாவு தங்களிடம் வலியுறுத்தியிருப்பதையும் நினைவுபடுத்துகிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
