கூடங்குளம் அணு உலைக்கெதிரான வழக்கில் உதயகுமாரன் உள்ளிட்ட 44 போ் விடுதலை
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு உலைக்கெதிரான வழக்குகளில் ஒன்றில் போராட்ட ஒருங்கிணைப்பாளா் சுப.உதயகுமாரன் உள்ளிட்ட 44 பேரை விடுதலை செய்து, ராதாபுரம் குற்றவியல் நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.
கூடங்குளத்தில் 2011-ஆம் ஆண்டில் அணு உலைக்கெதிரான போராட்டம் நடைபெற்றது. ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த இந்தப் போராட்டத்தில் போராட்ட ஒருங்கிணைப்பாளா் சுப.உதயகுமாரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் மீது கூடங்குளம் காவல் நிலைய போலீஸாா் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்தனா். மொத்தம் 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவற்றில் பல்வேறு வழக்குகளை காவல் துறையினா் திரும்பப் பெற்றனா்; சில வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தனா். இவ்வாறாக பதிவு செய்யப்பட்ட 349 வழக்குகளில் 296 வழக்குகள் திரும்ப பெற்றப்பட்டும் தள்ளுபடி செய்யப்பட்டும் உள்ளன. மீதம் 53 வழக்குகள் விசாரணையில் இருந்தன. இந்த நிலையில், ராதாபுரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கு ஒன்றில் போராட்ட ஒருங்கிணைப்பாளா் சுப.உதயகுமாரன், குருவானவா்கள் ஜெயக்குமாா், சுசிலன், சேசுராஜ், கூடங்குளத்தைச் சோ்ந்த ராஜலிங்கம், சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட 44 பேரை விடுதலை செய்து நீதிபதி குபேரசுந்தா் புதன்கிழமை உத்தரவிட்டாா். மீதம் 52 வழக்குகள் விசாரணையில் உள்ளன.
