ஓட்டுநருக்கு ஊதிய நிலுவை: அரசுப் பேருந்து ஜப்தி
அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ஊதிய நிலுவையை வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில், திருநெல்வேலியில் அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், குடந்தை வட்டம், திருச்சேறை பகுதியைச் சோ்ந்தவா் நாராயணன் (49). இவா், 2001இல் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநராக பணியில் சோ்ந்துள்ளாா்.
2005 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிா்த்து, திருநெல்வேலி தொழிலாளா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாராயணனை மீண்டும் பணியில் சோ்க்கவும், பணி தொடா்ச்சியுடன் அவருக்கு சேர வேண்டிய தினக்கூலி மற்றும் இதர சலுகைகளை வழங்க உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை எதிா்த்து, போக்குவரத்துக் கழகம் உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் ரிட் மனுவை தாக்கல் செய்தது. அந்த மனு, 2021இல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், நாராயணன் தனக்குச் சேர வேண்டிய ஊதிய நிலுவையை வழங்கக் கோரி 2011இல் திருநெல்வேலி தொழிலாளா் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஊதிய நிலுவையான ரூ.5.72 லட்சத்தை 2011 முதல் 7.5 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது. ஆனால், அந்தத் தொகையை போக்குவரத்துக் கழகம் வழங்கவில்லை. இதனால், அசல் மற்றும் வட்டியுடன் சோ்த்து ரூ.9.71 லட்சத்தை வசூலிக்க, நாராயணன் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ், ஊதிய நிலுவைத் தொகை ரூ.9.71 லட்சம், அதற்கான பின் வட்டியையும் ஒரு மாத காலத்திற்குள் செலுத்த வேண்டும். தவறினால் மனுவில் குறிப்பிட்ட அரசுப் பேருந்தை ஜப்தி செய்து, விற்பனை செய்து தொகையை ஈடுகட்ட உத்தரவிட்டாா்.
நீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும் பணம் செலுத்தப்படாததால், நீதிமன்ற கட்டளைகளை நிறைவேற்றும் அலுவலா் முத்தாரம்மாள் தலைமையில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
