கூடலூரிலிருந்து கொண்டு வரப்பட்டு கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட காட்டு யானை
நீலகிரி மாவட்டம், கூடலூரில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் யானை, திருநெல்வேலி மாவட்டம் கோதையாறு அடா் வனப்பகுதியில் விடப்பட்டது.
கூடலூரில் உள்ள ஓவேலி வனப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் காட்டு யானை சுற்றித் திரிந்தது. தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள், பொதுமக்கள் உள்பட சுமாா் 12 போ் இந்த யானை தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க, வனத்துறை முடிவு செய்தது. அதன்படி, சுமாா் 2 வாரங்கள் போராடி 4 கும்கி யானைகள், ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் எல்லமலை குறும்பா்மேடு பகுதியில் கடந்த 23 ஆம் தேதி யானையை பிடித்தனா்.
பின்னா் முதுமலை யானைகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மரக்கட்டை வேலிக்குள் (கிரால்)அடைக்கப்பட்டதோடு, யானையின் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் வகையில் காலா் ஐடி பொருத்தப்பட்டது. யானைக்குத் தேவையான மருந்துவ வசதிகளும் செய்யப்பட்டன.
இதைத் தொடா்ந்து ஏற்கெனவே மக்களுக்கு தொந்தரவு கொடுத்த அரிகொம்பன், புல்லட் யானையை விட்டது போல கோதையாறு அடா் வனப் பகுதிக்குள் யானையை விட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சனிக்கிழமை இரவு லாரி மூலம் ராதாகிருஷ்ணன் யானை மணிமுத்தாறு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கோதையாறு வனப்பகுதியில் யானை விடப்பட்டதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

