Enable Javscript for better performance
தூத்துக்குடி- சென்னை பகல் நேர இணைப்பு ரயில் சேவை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி- சென்னை பகல் நேர இணைப்பு ரயில் சேவை தொடக்கம்

    By தூத்துக்குடி  |   Published on : 01st August 2013 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி- சென்னை இடையேயான பகல் நேர இணைப்பு ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது. தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
    தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூத்துக்குடி- சென்னை இடையேயான பகல் நேர ரயில் போக்குவரத்து விரைவில் இயக்கப்படும் என கடந்த ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், குருவாயூர்- சென்னை இடையே இயக்கப்படும் ரயிலில் தூத்துக்குடியில் இருந்து 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு பகல் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அண்மையில் அறிவித்தது.
    இந்த ரயில் போக்குவரத்து தொடக்க விழா தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஏ.கே.ரஸ்தோகி தலைமை வகித்தார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை பச்சைக் கொடியசைத்து ரயில் போக்குவரத்தை தொடங்கிவைத்தார்.
    தூத்துக்குடி-சென்னை -எழும்பூர் இடையேயான இணைப்பு விரைவு ரயில் எண்: (16130) தூத்துக்குடியிலிருந்து தினமும் காலை 7.35 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். இந்த ரயில் சென்னை குருவாயூர் விரைவு ரயிலுடன் வாஞ்சிமணியாச்சியில் காலை 8.35 மணிக்கு இணைக்கப்படும்.
    இதேபோல, எதிர் வழித்தடத்தில் சென்னை எழும்பூர்- தூத்துக்குடி இணைப்பு விரைவு ரயில் (எண்: 16129) சென்னை எழும்பூரிலிருந்து தினமும் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு வாஞ்சி மணியாச்சியில் பிரிக்கப்பட்டு இரவு 8.35 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.
    தூத்துக்குடி- சென்னை இடையேயான பகல் ரயில் இயக்கப்பட்டதும் தூத்துக்குடி 1-ஆம் கேட், 2-ஆம் கேட், 3-ஆம் கேட், 4-ஆம் கேட் ஆகிய இடங்களில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சியுடன் ரயிலை வழியனுப்பி வைத்தனர்.
    ரயில் போக்குவரத்து சேவை தொடக்க விழாவில். மதுரை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் அஜித்குமார், முதுநிலைப் பொறியாளர் சிதம்பரவேலன், வணிகப் பிரிவு மேலாளர் கோவிந்தப்பராஜீவ், இயக்குதல் பிரிவு மேலாளர் ராமஜெயம், முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால், தூத்துக்குடி ரயில் நிலைய மேலாளர்கள் கல்யாணசுந்தரம், லைனல், மாவட்ட பயணிகள் நலச் சங்கத் தலைவர் கல்யாணசுந்தரம், செயலர் பிரம்மநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai