Enable Javscript for better performance
அங்கன்வாடி மையங்கள், கருத்தரங்கு கூடம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    அங்கன்வாடி மையங்கள், கருத்தரங்கு கூடம் திறப்பு

    By கோவில்பட்டி,  |   Published on : 02nd August 2013 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செவல்பட்டி மற்றும் கடம்பூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அங்கன்வாடி மையங்களையும், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கருத்தரங்கு கூடத்தையும் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

    இந்தக் கட்டடங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் முறையே ரூ.5 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டவையாகும்.

    கோவில்பட்டியில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவுக்கு, கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். தூத்துக்குடி மருத்துவ நலப் பணி இணை இயக்குநர் நல்லதம்பி ஞானதிவாகரன் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் கருத்தரங்கு கூடம் மற்றும் கல்வெட்டை திறந்து வைத்துப் பேசுகையில், கோவில்பட்டியில் அரசு கலைக் கல்லூரி, ஹாக்கி மைதானம், கதிரேசன் கோவில் சுற்றுலாப் பணி, குடிநீர்த் திட்டம், கழுகுமலை சுற்றுலாப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தமிழக முதல்வரின் உத்தரவால் நடைபெற்று வருகின்றன.

    கோவில்பட்டியில் அமையவிருக்கும் ஹாக்கி மைதானம் அருகே நீச்சல் குளம், வாலிபால், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுக்கள் விளையாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்படும். குருமலைப் பகுதிகளிலும் சுற்றுலாப் பணி நடைபெற தமிழக அரசுக்கு திட்டங்கள் தயார் செய்து, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, திட்டங்கள் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

    மருத்துவமனை நிலைய அதிகாரி ராஜேந்திரபிரசாத், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவி பேச்சியம்மாள், நகர்மன்ற துணைத் தலைவர் ராமர், அதிமுக நகரச் செயலர் சங்கரபாண்டியன், நகராட்சி ஆணையர் வரதராஜ், வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மருத்துவர் ஸ்ரீவெங்கடேஷ் வரவேற்றார். மருத்துவர் பாலன் நன்றி கூறினார்.

    செவல்பட்டியில் நடைபெற்ற விழாவில், ஊராட்சித் தலைவர் அப்பாசாமி, துணைத் தலைவர் வள்ளியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கடம்பூர் பேரூராட்சிக்கு உள்பட்ட சங்கரப்பேரியில் நடைபெற்ற விழாவில், ஊராட்சித் தலைவர் மாரியப்பன், துணைத் தலைவர் நாகராஜா, கோட்டாட்சியர் கதிரேசன், வட்டாட்சியர் ரமேஷ், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய ஆணையர் திருக்கம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், ரவிச்சந்திரன், கப்பல் ராமசாமி, ரமேஷ், ராமச்சந்திரன், அமிர்தராஜ்பாண்டியன், சிவபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai