Enable Javscript for better performance
தாமரைமொழி ஊராட்சியில் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம், தாமரைமொழி ஊராட்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டப் பணியாளர்கள் வியாழக்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனர்.

    தாமரைமொழி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் 102 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 15 நாள்களாக பணி வழங்கப்படவில்லை. ஊராட்சி எல்லை பிரச்னை காரணமாகவும் வேலை அளிக்கப்படுவது தாமதமாகி வருவதாகக் கூறப்படுகிறது.

    இதனால், இத் திட்ட பணியாளர்கள் வருவாய் இன்றி தவித்து வருகிறார்கள். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் முறையிட்டும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில், தாமரைமொழியைச் சேர்ந்த மாரி தலைமையில் 102 பணியாளர்களும், சாமிதோப்பில் உள்ள தாமரைமொழி ஊராட்சி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்த மாவட்ட உதவித் திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய ஆணையர் சங்கரநாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியவதி, ஊராட்சித் தலைவர் ம.ஜெயராமன், கிராம நிர்வாக அலுவலர் ரவிசின்னத்துரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரூ 4.69 லட்சம் மதிப்பில் ஊருணி குளம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரின் நிர்வாக அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி பெறப்பட்டதும் அந்தப் பணி தொடங்கிவிடும்.

    இதனுடன் சிறு-குறு விவசாயிகளின் நிலங்களில் மரம் நடும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, தொடர்ச்சியான வேலைவாய்ப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    மேலும், ஊராட்சியின் எல்லை பிரச்னை தொடர்பாக, வட்டாட்சியர் தலைமையில் வரைபடத்தை பார்த்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai