Enable Javscript for better performance
கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

    By தூத்துக்குடி  |   Published on : 05th August 2013 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்துக்கு போர்க்கால அடிப்படையில் தண்ணீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

     இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாரிடம் கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் ராஜேந்திரபூபதி, சுந்தரபாண்டி ஆகியோர் அளித்த மனு விவரம்:

     தாமிரவருணி பாசனத்துக்குள்பட்ட ஸ்ரீவைகுண்டம் வடகாலில் கடைசியாக உள்ள கோரம்பள்ளம் குளத்தை நம்பி கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம், காலான்கரை, அத்திமரப்பட்டி,  முள்ளக்காடு,  முத்தையாபுரம்,  வீரநாயக்கன்தட்டு ஆகிய பகுதிககளில் நெல் மற்றும் வாழைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

     ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் வடகாலில் தண்ணீர் திறந்துவிடும் போதெல்லாம் கடைசியிலுள்ள கோரம்பள்ளம் குளம் வரை சென்று பாய்வது சிரமமாக இருந்து வருகிறது.

     அடிக்கடி பாதியிலேயே தண்ணீர் நிறுத்தப்பட்டு விடும் நிலை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

     இந்நிலையில், பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட போதிலும் இதுவரை கோரம்பள்ளம் குளத்தை தண்ணீர் எட்டிப்பார்க்காத நிலை உள்ளது. 

     ஸ்ரீவைகுண்டம் வடகால் பகுதியில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகள் தண்ணீர்வரத்தை தடுத்துவருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

     எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த விசயத்தில் தலையிட்டு கோரம்பள்ளம் பகுதிக்கு உடனே தண்ணீர் வர போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai