Enable Javscript for better performance
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் தங்கத் தேர் பவன- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் தங்கத் தேர் பவனி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில்,  லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    உலகளவில் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 431-ஆம்  ஆண்டு திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  நடைபெற்று வந்தது. தினமும் காலையும் மாலையும் ஜெபமாலை, திருயாத்திரை  திருப்பலிகள், சிறப்புத் திருப்பலிகள், மறையுரை, நற்கருணை ஆசீர் போன்ற பல்வேறு  வழிபாடுகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய அம்சமாக நகர வீதிகளில் அன்னையின் தங்கத் தேர் பவனி வரும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 4.30  மணிக்கு மதுரை மறைமாவட்ட பேராயர் பீட்டர் பர்னாண்டோ தலைமையில் தேரில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் ஆடம்பர பெருவிழா கூட்டுத் திருப்பலி  நடைபெற்றது. இதில், சுமார் 50 அருள்தந்தையர்கள் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினர்.

    தொடர்ந்து, காலை 7.50 மணிக்கு பேராயர் பீட்டர் பர்னாண்டோ அர்ச்சிப்பு செய்ய  அன்னையின் தங்கத் தேர் பவனி ஆலய வளாகத்திலிருந்து புறப்பட்டு நகர வீதிகளில்  சென்றது. செயின்ட் பீட்டர் கோவில் தெரு, வி.இ. சாலை, தெற்கு ராஜா தெரு,  சின்னக்கோவில் வளாகம், டபிள்யூ.ஜி.சி. சாலை, கடற்கரைச் சாலை உள்ளிட்ட முக்கிய  சாலைகள் வழியாகச் சென்ற தங்கத் தேர், மீண்டும் பேராலய வளாகத்தை பகல் 12 மணிக்கு வந்தடைந்தது.

    தொடர்ந்து, பகல் 12.30 மணிக்கு திருச்சி ஆயர் அந்தோனி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றித் திருப்பலி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு பேராலயத்தில் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் நிகழ்ச்சியும், அதன்பின் நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.

    தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முநாதன், சட்டப்பேரவை உறுப்பினர்  சி.த. செல்லப்பாண்டியன், மாநகராட்சி மேயர் எல். சசிகலா புஷ்பா, நகராட்சி முன்னாள் தலைவர் இரா. ஹென்றி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் தங்கத் தேர் பவனி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள், இலங்கை, மாலத்தீவு போன்ற வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த  லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கத் தேர் பவனியில் கலந்துகொண்டனர்.

    திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மா. துரை மேற்பார்வையில் போலீஸôர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். தங்கத் தேர் சென்ற நகர வீதிகளில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு  கண்காணிக்கப்பட்டது. மேலும், 120 ஊர்க்காவல் படையினர் உள்பட 700 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai