Enable Javscript for better performance
ஆடி அமாவாசை: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்- Dinamani

சுடச்சுட

    

    ஆடி அமாவாசை: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்

    By திருச்செந்தூர்  |   Published on : 07th August 2013 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் ஏராளமானோர் புனித நீராடியும், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபட்டனர்.

    ஆடி அமாவாசையையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நடை செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அதன்பின்பு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், கால சந்தி பூஜை, தீர்த்தவாரி உள்ளிட்டவை நடைபெற்றன. திருச்செந்தூர் கடலில் ஏராளமானோர் புனித நீராடியும், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபட்டனர்.

    தண்ணீரில்லாத தெப்பக்குளத்தில் தர்ப்பணம்:  கோவில்பட்டியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, தண்ணீர் தட்டுப்பாட்டுக்கிடையில் செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் செவ்வாய்க்கிழமை திரளானோர் தர்ப்பணம் செய்தனர்.

    இக் கோவிலுக்குச் சொந்தமான தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தீர்த்தவாரி திருவிழா மற்றும் தெப்பத் திருவிழாவையொட்டி, மண்டகப்படிதாரர்கள் சார்பில் தெப்பத்தில் தண்ணீர் நிரப்பப்படும்.பின்னர் இதை கோவில் நிர்வாகம் பராமரிப்பதே இல்லை. இந்நிலையில், ஆடி அமாவாசை அன்று கோவில் தெப்பத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக மிகவும் குறைந்த எண்ணிக்கையில் டிரம்களில் தண்ணீர் நிரப்பி, தெப்பக்குளம் அருகே வைத்திருப்பது வழக்கம்.  அதன்படி செவ்வாய்க்கிழமை, தெப்பத்தில் தண்ணீர் இல்லாததாலும், டிரம்களில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரும் போதுமானதாக இல்லாததாலும் தர்ப்பணம் செய்வோர் ஒவ்வொருவரும் தண்ணீர் பாட்டில், தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி வந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட முக்கிய தினங்களில் தெப்பக்குளத்தில் தண்ணீரை நிரப்ப கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சங்குமுகத்தில் புனித நீராடல்: பழையகாயல் அருகே சங்குமுகத்தில் பல்வேறு இடங்களிலிருந்து வந்த பக்தர்கள் புனித நீராடினர்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் தனது பயணத்தைத் தொடங்கும் தாமிரபரணி ஆறு தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகில் மூன்றாக பிரிந்து பின் வங்கக்கடலில் சங்கமிக்கிறது.

    இந்த இடத்திற்கு செவ்வாய்க்கிழமை அதிகாலையிலேயே தென் மாவட்டங்களிலிருந்து வந்த பக்தர்கள் சுமார் 7 கி.மீ. தொலைவு நடந்து சென்று ஆறும், கடலும் சங்கமிக்கும் சங்குமுகத்தில் புனித நீராடி கடற்கரையில் உள்ள விநாயகரை வழிபட்டனர். கடற்கரையில் மூதாதையர்களுக்கு மக்கள் தர்ப்பணம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai