Enable Javscript for better performance
40 ஹெக்டேர் பரப்பளவில் விதிமீறி கார்னெட் மணல் அள்ளப்பட்டுள்ளது: தூத்துக்குடி ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    40 ஹெக்டேர் பரப்பளவில் விதிமீறி கார்னெட் மணல் அள்ளப்பட்டுள்ளது: தூத்துக்குடி ஆட்சியர்

    By dn  |   Published on : 08th August 2013 10:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரைப் பகுதியில் ஏறத்தாழ 40 ஹெக்டேர் பரப்பளவில் விதிமுறையை மீறி கார்னெட் மணல் அள்ளியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் புதன்கிழமை அளித்த பேட்டி:

    வேம்பார் மற்றும் வைப்பாறு கடற்கரைப் பகுதியில் விதிமுறையை மீறி கார்னெட் மணல் அள்ளப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் அங்கு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது, வைப்பாறு பகுதியில் பெரிய அளவில் விதிமுறை மீறல்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. வேம்பார் பகுதியில் சுமார் 4 ஹெக்டேர் நிலம் மட்டுமே வி.வி. மினரல்ஸ் குழுமத்தினர் குத்தகைக்கு எடுத்துள்ளனர். ஆனால், ஏறத்தாழ 40 ஹெக்டேர் பரப்பளவுக்கு அவர்கள் விதிமுறையை மீறி கார்னெட் மணல் அள்ளியுள்ளனர்.

    அரசு புறம்போக்கு நிலத்தில் கடற்கரையோரம் 81 ஆயிரம் கனமீட்டர் அளவுக்கு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் 2.30 லட்சம் மெட்ரிக் டன் கனிமம் (மினரல்) எடுக்கப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி எடுக்கப்பட்டுள்ள இந்தக் கனிமத்துக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும். இதுதொடர்பாக வி.வி. மினரல்ஸ் குழும நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

    மணல் திருட்டு, அரசுப் பொருள்களைச் சேதப்படுத்துதல் விதி 1992-ன் கீழ், கனிம வளச் சட்டம் 1957 என் கீழ், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சட்டம் 1996-என் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து குளத்தூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரி மூலம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறைதான்.

    இதற்கு முன்பு சாத்தான்குளம் வட்டம், பெரியதாழை கடற்கரை பகுதியில் பி.எம்.சி. மினரல் நிறுவனம் விதிமுறையை மீறி கார்னெட் மணல் அள்ளியதாக அந்த நிறுவனத்துக்கு ரூ. 3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

    இம் மாவட்டத்தைப் பொருத்தவரை 7 கார்னெட் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை விதிமுறையை மீறியே செயல்படுவதாகத் தெரியவந்துள்ளது.

    திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கடற்கரையோரங்களில் விதிமுறையை மீறி கார்னெட் மணல் அள்ளப்படுவது தெரியவந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை அரசுக்கு விளக்கமாக தெரிவித்து உள்ளேன் என்றார்.

    பெரிய அளவில் விதிமுறையை மீறி கார்னெட் மணல் அள்ளப்பட்டுள்ளது நீண்ட நாள்களாகவே நடைபெற்று உள்ள நிலையில், இப்போது மட்டும் நடவடிக்கை எடுக்க காரணம் என்ன என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்குப் பதிலளித்த ஆட்சியர் ஆஷிஷ்குமார், மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்படும் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பலமுறை இதுதொடர்பாக புகார்கள் வந்திருந்தபோதிலும், ஜூன் மாதம்தான் எழுத்துபூர்வமாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    இந்த விவகாரத்தில் இதுவரை விதிமுறை மீறப்பட்ட விவரம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai