Enable Javscript for better performance
எட்டயபுரம் நூற்பாலையில் அமைச்சர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் கைத்தறித் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

    எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் பல்வேறு பிரிவுகளுக்குச் சென்று ஆய்வு செய்த அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:   

    1-10-1984-ல் 12,480 கதிர்களுடன் இந்த ஆலை தொடங்கப்பட்டது. இப்போது 14,496 ஆக உயர்த்தப்பட்டு, மொத்த உற்பத்தி 16 சதவீதம் உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டு ரூ.23 கோடியாக இருந்த நூல் விற்பனை நிகழாண்டு ரூ.26 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆலைக்கு மாதம் ஒன்றிற்கு 800 பஞ்சு பேல்கள் தேவைப்படுகிறது. இதற்கு தேவையான தொகை கைத்தறித் துறை இயக்ககத்திலிருந்து ஆலைக்கு முன்பணமாக வழங்கப்படுகிறது. அத்தொகை மூலம் இந்திய பருத்திக் கழகத்திடமிருந்து பஞ்சு பேல்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இப்போது ஆலையில் போதுமான அளவில் பஞ்சு பேல்கள் கையிருப்பில் உள்ளன.

    இந்த பாரதி கூட்டுறவு ஆலையில் உற்பத்தியாகும் நூல்கள் அரசுத் திட்டங்களான இலவச வேஷ்டி, சேலை, பள்ளிச் சீருடைத் திட்டம் ஆகியவற்றிற்கு உள்பட்டதாகும். 2012-13-ல் ரூ.1.53 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்த ஆலையின் இயந்திரங்களை நவீனப்படுத்த, ஆலை நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் தமிழக முதல்வர் ரூ.19.10 கோடி அனுமதித்து அரசாணை பிறப்பித்துள்ளார்.

    இத்திட்டம் நிறைவடையும்போது ஆலையின் உற்பத்தி 2 மடங்காக உயர்ந்து, ஆண்டுக்கு சுமார் ரூ.6.50 கோடி லாபம் (வட்டி மற்றும் இயந்திரம் தேய்மானத்திற்கு முந்தைய லாபம்) ஈட்டும் நிலை ஏற்படும்.

    ஆலை நவீனப்படுத்தப்பட்ட பின்னர், ஆலையின் கதிர்களின் எண்ணிக்கை இப்போதுள்ள 14,496-லிருந்து 18,144 ஆக உயரும் என்றார் அவர்.

    முன்னதாக, நூற்பாலைக்கு வந்த அமைச்சரை ஆலையின் துணை இயக்குநர் சாரதிசுப்புராஜ் வரவேற்றார். ஆய்வின்போது, பாரதி கூட்டுறவு நூற்பாலை சங்கத் தலைவர் ராகவன், எட்டயபுரம் அதிமுக நகரச் செயலர் ஆழ்வார்உதயகுமார், மாணவரணிச் செயலர் சுப்பையா, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai