கோவில்களில் ஆடிப்பூர வளைகாப்பு விழா
By கோவில்பட்டி | Published on : 10th August 2013 01:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவில்பட்டி மற்றும் சிந்தலக்கரை கோவில்களில் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பை முன்னிட்டு காலையில் திருவனந்தல் பூஜை, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றன. மாலையில் ஆடிப்பூர அபிஷேகம், வளையல் மாலை அணிவித்து பூஜைகள் நடைபெற்றன.
அதன்பின்பு அம்மனுக்கு பாசிப்பயறு கட்டி, கர்ப்பிணி கோலத்தில் சிறப்பு தரிசனமும், வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன. பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு, நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி, துணைத் தலைவர் ராமர், நகர அதிமுக செயலர் சங்கரபாண்டியன், கோவில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள், ஜனக் கல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிந்தலக்கரை: எட்டயபுரம் அருகேயுள்ள சிந்தலக்கரை காளிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, காளிபராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பூஜைகளை ஸ்ரீ ராமமூர்த்தி சுவாமிகள் செய்தார். பக்தர்களுக்கு கஞ்சி, வளையல்கள், மஞ்சள் கயிறு, குங்குமம், இனிப்பு வகைகள் மற்றும் பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. 42 அடி உயர வெட்காளியம்மனுக்கும் வளையல் மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சோடசபுஜ துர்க்கை அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு வளைகாப்பு திருவிழா நடைபெற்றது.
இதேபோல திருச்செந்தூர் அருள்தரும் ஆனந்தவல்லி சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவிலிலும், அருள்தரும் ஸ்ரீ முத்தாரம்மன், அன்பிற்பிரியாள் அம்மன், ஸ்ரீ புளியடி சந்தனமாரியம்மன், ஸ்ரீ சந்தனமாரியம்மன், ஸ்ரீ தேவி மாரி முத்தாரம்மன் கோவில்களிலும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.