செப்டம்பர் 25-ல் சென்னையில் தொடர் மறியல்
By தூத்துக்குடி, | Published on : 10th August 2013 01:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மூவர் குழு அறிக்கையில் ஒட்டுமொத்தமாக இடைநிலை ஆசிரியர்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து, செப்டம்பர் 25-ம் தேதி முதல் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின், தூத்துக்குடி மாவட்ட கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடத்தப்படவுள்ள போராட்டத்துக்கான ஆயத்தக் கூட்டம் மாவட்டத் தலைவர் பொ. ஜீவா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஓய்வுப் பிரிவு மாவட்டத் தலைவர் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் கோ. காமராஜ், பொதுச் செயலர் ரெங்கராஜன், பொருளாளர் ஜோசப் சேவியர், முன்னாள் பொருளாளர் வில்சன் பர்னபாஸ், மாவட்டச் செயலர் சிவன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் சு. ஈஸ்வரன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தின்போது, 6-வது ஊதியக் குழுவில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியத்தை தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.6.2006 முதல் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
கல்வித் துறை அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மூவர் குழு அறிக்கையில் ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செப்டம்பர் 25-ம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டங்கள் நடத்துவது என்றும் இந்தப் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் கலந்துகொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.