பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்க அழைப்பு
By தூத்துக்குடி, | Published on : 12th August 2013 01:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெற உள்ள பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக மாவட்டச் செயலர் என். பெரியசாமி வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவர் கருணாநிதியின் முரசொலி அறக்கட்டளை சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பாடல் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள கீதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆகஸ்ட் 17-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் மாணவர், மாணவிகள் மற்றும் கல்லூரியில் படிப்போர் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் ஆளறிச்சான்று கடிதம் பெற்று வரவேண்டும். ஒரு பாடல் மட்டும் ஒப்பித்தல் வேண்டும்.
பள்ளி மாணவர்கள் பாரதிதாசனின் தென்றல் என்னும் தலைப்பில் பொதிகை மலை விட்டெழுந்து சந்தனத்தில் என தொடங்கி பாழக்கினாலும் அதில் கவலை கொள்ளேன் என்று முடியும் வரை உள்ள 24 வரிகள், சிறுத்தையே வெளியில் வா என்னும் தலைப்பில் பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு என தொடங்கி வாழ்க நின் வையத்து மாப்புகழ் நன்றே என்று முடியும் வரை உள்ள 27 வரிகள் இவற்றுள் ஒரு பாடலை பாடலாம்.
இதேபோல, கல்லூரி மாணவர்கள் பாரதிதாசனின் என்நாளோ என்னும் தலைப்பில் என்னருந்தமிழ் நாட்டின் கண் என தொடங்கி ஆரிதைப் பகர்வார் இங்கே என முடியும் வரை உள்ள பாடல் 24 வரிகளையும் அல்லது வாளினை எடடா என்னும் தலைப்பில் வலியோர் சிலர் எளியோர் தமை என தொடங்கி இனி மேலிலை எனவே முரசறைவாய் என்று முடியும் 32 வரிகள் என்ற பாடலையும் ஒப்பித்தல் வேண்டும்.
இது தொடர்பான விவரங்களை பெற 94420 55525 என்ற எண்ணைத் தொடர்புக் கொண்டு விவரம் பெறலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள் பாடல் ஒப்பித்தல் போட்டியில் ஆர்வமாக கலந்துகொண்டு பரிசுகளை பெற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.