Enable Javscript for better performance
கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் வழங்கக் கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் வழங்கக் கோரி மனு

    By தூத்துக்குடி  |   Published on : 13th August 2013 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

    தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வேதமணி தலைமையிலான விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த மனு:

    கோரம்பள்ளம் பகுதியைச் சுற்றி சுமார் ஆயிரம் ஏக்கரில் வாழை, தென்னை பயிரிட்டுள்ளோம். கடந்த 5 மாதமாக தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட்டது. இதனால் கால்நடைகள் தண்ணீரின்றி நோய்க்கு ஆளாகின்றன.

    கடந்த மாதம் ஆட்சியர் நடத்திய விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது கோரம்பள்ளம் குளத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிடப்படும் என உறுதியளித்தார். ஆனால், பெட்டைகுளம் வரை வந்த தண்ணீர், மடையை திறக்காததால் கோரம்பள்ளத்தை வந்தடையவில்லை. இதுகுறித்து ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    செவிலியர் உதவியாளர்கள் மனு: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராகப் பணியாற்றும் இசக்கியம்மாள் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பெண் செவிலிய உதவியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தினக் கூலியாக கடந்த 10 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறோம். இப்போது செவிலிய உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் அதிகளவில் உள்ளன. இதில் தகுதி உள்ளவர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஒருவழிப் பாதையை மாற்ற வலியுறுத்தல்: காயல்பட்டினம் பெரிய நெசவுத்தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனு: கடந்த பிப்ரவரி 3-ம் தேதி முதல் காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு வழியாக வாகனங்கள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தெருவில் குறுகிய வளைவுகள் இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

    ஒருவழிப் பாதை தாற்காலிகமானதுதான் என அறிவித்து பல மாதங்களாகியும் இதுவரை மாற்றப்படவில்லை. எனவே, பெரிய நெசவு தெரு வழியாக சென்று கொண்டிருக்கும் ஒருவழி போக்குவரத்தை மாற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மதச்சார்பற்ற ஜனதா தள மாநில துணைத் தலைவர் வழக்குரைஞர் சொக்கலிங்கம் அளித்த மனு:

    ஆத்தூரில் சுனாமி சீரமைப்பு நிதியிலிருந்து ரூ.15 கோடி செலவில் புதிய பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் இதுவரை முடியாததால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதுபோல, ஏரல் அருகே தாமிரவருணி ஆற்றில் ரூ.15 கோடி செலவில் பாலம் கட்டும் பணி 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த இரண்டு பாலங்களையும் உடனடியாக கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாடடிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai