Enable Javscript for better performance
ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    :தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் நட்டாத்தி ஊராட்சி, பட்டாண்டிவிளை கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமார் தலைமை வகித்தார்.

    விழாவில் அவர் பேசுகையில், தமிழக அரசின் தூய்மை கிராம இயக்க விருது பெற்ற இந்த கிராமத்தை கோவிலாக நினைத்து வந்துள்ளேன். மக்கள் நன்றாக சுகாதாரமாக வாழும் கிராமம்தான் கோவிலுக்குச் சமம் என்பது என்னுடைய எண்ணம்.

    அரசு பல திட்டங்களை செயல்படுத்தினாலும் சேவை மனப்பான்மை உள்ள மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் அந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் இதுபோன்ற சிறப்பை பெற முயல வேண்டும்.

    தூத்துக்குடி மாவட்ட மக்கள் கல்வியறிவு மிக்கவர்கள். பொதுமக்கள் தங்களுடைய தேவைகள் குறித்து என்னிடம் தெரிவிக்கலாம். மக்களுடைய கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்படுத்தும் என்றார்.

    கிராமசபைக் கூட்டத்தின்போது, முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பண்ணை குட்டைகள் அமைத்தல், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்தல், அரசு தரும் எல்லா வசதி திட்டங்களையும் பெறச் செய்தல், பள்ளி செல்லா குழந்தை என்ற கிராமம் இல்லை என்ற நிலை உருவாக்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில் நட்டாத்தி ஊராட்சித் தலைவர் பண்டாரம், தூத்துக்குடி மாவட்ட கிராமவாழ் மக்கள் நலச்சங்கத் தலைவர் நயினார் குலசேகரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் சண்முகவள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர் வீரபாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பள்ளிபத்து ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு பள்ளிபத்து ஊராட்சித் தலைவர் ரவி தலைமை வகித்தார். தொகுதி அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஷாலினி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) வேலுமயில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அன்றோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முதல்வரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்ட அலகு தொகை ரூ. 2.10 லட்சம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட அலகு தொகை ரூ.1.20 லட்சம் ஆகிய திட்டங்கள் குறித்தும், கிராம ஊராட்சியின் வரவு செலவு குறித்த விவரங்களும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில நடைபெறும் பணிகள் விவரம், தாய் திட்டத்தில் நடைபெறும் பணிகள் விவரம் மற்றும் ஊரக கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் சீரமைப்புத் திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai