தாமிரவருணி பாசன பிசான சாகுபடிக்கு வட்டி இல்லா கடன் வழங்கக் கோரிக்கை
By ஸ்ரீவைகுண்டம் | Published on : 19th August 2013 03:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தாமிரவருணி பாசனத்தில் தூத்துக்குடி மாவட்ட கார் சாகுபடிக்கு பெரும்பாலான பகுதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பிசான சாகுபடிக்கு வட்டி இல்லா கடன் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட தாமிரவருணி நதிநீர் பாசன விவசாயிகள் கூட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.
தாமிரவருணி நதிநீர் பாதுகாப்பு பேரவை தலைவர் நயினார்குலசேகரன் தலைமை வகித்தார்.
தோழப்பன்பண்னை முன்னாள் ஊராட்சித் தலைவர் காசிராஜன், தாமிரவருணி பாசன உரிமை பாதுகாப்பு பேரவை தலைவர் வியனரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் 2012- 2013-ம் ஆண்டுக்கான பிசானம், முன்கார், கார் ஆகிய சாகுபடிகள் தொடர்ந்து நடைபெறாததால் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன.
பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் போதுமான தண்ணீர் இருந்தும் பொதுப்பணித்துறையினரின் தவறான தண்ணீர் விநியோக முறைகளினால் சுமார் 19 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட வாழை, வெற்றிலை கொடிகால்களும் தண்ணீர் கிடைக்காமல் அழிந்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும், அக்டோபர் மாதம் பிசான சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கவேண்டும், விதை, உரம் பூச்சி மருந்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 22-ம் தேதி நல்லகண்ணு, வைகோ மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை அழைத்து விவசாயிகள் விழிப்புணர்வு மாநாடு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் கஸ்பா விவசாயிகள் சங்க மண்டலத் தலைவர் ராசவேல், கோட்டை காளிதாசன், தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை சம்பத், பாரத ஸ்டேட் வங்கி அம்பேத்கர் தொழிற்சங்க மாநில துணைச் செயலர் பெருமாள், செல்வம், மங்கலகுறிச்சி சந்திரமோகன், ஆழ்வார்கற்குளம் சுப்பையா, மலையாண்டி, சிவபெருமாள், பால்பாண்டி, முன்னாள் விவசாய சங்கச் செயலர் தாமஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.