மாநில அளவிலான ஹாக்கி போட்டி: லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் அணி தகுதி
By கோவில்பட்டி, | Published on : 19th August 2013 03:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருநெல்வேலி மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் வெற்றிபெற்ற கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அணி மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்குபெற தகுதி பெற்றது.
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 5 பாலிடெக்னிக் கல்லூரி அணிகள் கலந்து கொண்டன.
முதல் காலிறுதிப் போட்டியில் தருவை எப்.எக்ஸ். பாலிடெக்னிக் கல்லூரி அணியும், தக்கலை நூருல் இஸ்லாம் பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதியதில், 6-0 என்ற கோல் கணக்கில் தருவை எப்.எக்ஸ். பாலிடெக்னிக் கல்லூரி அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு காலிறுதிப் போட்டியில் மேலத்திடியூர் பி.எஸ்.என். பாலிடெக்னிக் கல்லூரி அணியும், ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதின. இதில், மேலத்திடியூர் கல்லூரி அணியினர் 7-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
அரையிறுதிப் போட்டியில் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அணியும், எப்.எக்ஸ். பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதின. இதில், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அணியும், மேலத்திடியூர் பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதின. இதில், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றது.
பரிசளிப்பு: மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசளிக்கப்பட்டது. விழாவுக்கு நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். இந்தியன் வங்கி உதவி மேலாளரும், முன்னாள் தமிழ்நாடு ஹாக்கி அணி வீரருமான பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற அணியினருக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கிப் பேசினார்.
விழாவில், கல்லூரி முதல்வர்கள் சுப்புராஜ் (நேஷனல் பொறியியல் கல்லூரி), கண்ணப்பன் (கே.ஆர்.கலைக் கல்லூரி), குப்புசாமி (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக்) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.