Enable Javscript for better performance
தாது மணல் விவகாரம்: ஆய்வுக் குழுவிடம் குவாரி உரிமையாளர்கள் நேரில் விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தாது மணல் விவகாரம்: ஆய்வுக் குழுவிடம் குவாரி உரிமையாளர்கள் நேரில் விளக்கம்

    By dn  |   Published on : 21st August 2013 12:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாது மணல் ஏற்றுமதி தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய  வேண்டும் என, மணல் குவாரி உரிமையாளர்களிடம் வருவாய்த் துறைச் செயலரான ககன்தீப் சிங் பேடி செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் முறைகேடாக தாது மணல் அள்ளப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக, வருவாய்த் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான  சிறப்புக் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த 12-ஆம் தேதிமுதல் 14-ஆம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதி பெற்று நடத்தப்படும் 6 குவாரிகளில் முதல் கட்ட கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் கட்டமாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    முதல்கட்ட ஆய்வின் முடிவில், முறைகேடாக தாது மணல் அள்ளப்படுவது தொடர்பான புகார் குறித்து செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) நேரில் விளக்கம் அளிக்குமாறு குவாரிகளின் உரிமையாளர்களுக்கு கனிம வளத் துறை உதவி இயக்குநர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. மேலும், விதிமுறையை மீறி தாது மணல் அள்ளப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக பொதுமக்களும், மீனவர்களும் தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம் என சிறப்புக் குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி, திங்கள்கிழமை மாலை தாது மணல் அள்ளுவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் ஏராளமானோர் மனு அளித்தனர்.

    நேரில் விளக்கம்: கனிமவளத் துறை உதவி இயக்குநரின் கடிதம் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வருவாய்த் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி முன்னிலையில் விளக்கம் அளிப்பதற்காக மாவட்டத்தில் 3 தாது மணல் குவாரிகள் நடத்த அனுமதி பெற்றுள்ள வி.வி. மினரல் உரிமையாளர் வைகுண்டராஜன் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

    நேராக மாவட்ட ஆட்சியர் அறைக்குச் சென்ற அவர் அங்கிருந்த வருவாய்த் துறைச்  செயலர் ககன்தீப் சிங் பேடியிடம் சில விளக்கங்களை அளித்தார். தாது மணல் கிடைக்கும் பகுதிகள், தாது மணலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் முறைகள் குறித்து  அவர் ஆவணங்களுடன் விளக்கம் அளித்தார்.

    மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய அனுமதி பெற்று நடத்தப்படும் குவாரிகள் உள்ள இடங்கள் குறித்த விவரத்தையும், அதற்கான ஆவணங்களையும் அவர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கினார். முறைகேடாக தாது மணல் அள்ளியதாகப் புகார் எழுந்துள்ளது குறித்து ககன்தீப் சிங் பேடி கேள்வி எழுப்பியபோது, தான் எந்தவகையிலும் அரசின் விதிமுறையை மீறி தாது மணல் அள்ளவில்லை என விளக்கம் அளித்தார். சிலர் வேண்டுமென்றே தனக்கு  எதிராகச் செயல்படுவதாகவும், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத் தேர்தலில் தனது நண்பருக்கு உதவியாகச் செயல்பட்டதால் எதிர்தரப்பினர் தனக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் வைகுண்டராஜன் கூறினார்.

    அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதி பெற்ற பகுதிகளில் இதுவரை தாது மணல் அள்ளிய விவரங்கள், இதுவரை ஏற்றுமதி செய்த தாது மணல் குறித்த விவரங்களை ஆண்டு வாரியாக வழங்க வேண்டும் என வைகுண்டராஜனிடம் ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து, காலை 10.35 மணிக்கு பீச் மினரல் நிறுவன உரிமையாளரும்,  வைகுண்டராஜனின் சகோதரருமான சுகுமாரன், ககன் தீப் சிங் பேடி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். இவர், தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு குவாரிகள் நடத்தி வருகிறார். அவரிடமும், ஏற்றுமதி குறித்த ஆவணங்களை ஆண்டு வாரியாக வழங்கும்படி ககன்தீப்சிங் பேடி கேட்டுக்கொண்டார்.

    இதேபோல, மாவட்டத்தில் ஒரு தாது மணல் குவாரி நடத்த அனுமதி பெற்றுள்ள இந்தியன் கார்னெட் நிறுவன உரிமையாளர் தயா தேவதாஸ் தன்னால் நேரில் ஆஜராக முடியாது என எழுத்துபூர்வமாக விளக்கம் அளித்துள்ளதால் அவர் செவ்வாய்க்கிழமை வரவில்லை.

    இதையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai