Enable Javscript for better performance
2-ஆம் கட்ட கள ஆய்வு நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் முறைகேடு புகார் குறித்து  இரண்டாம் கட்ட ஆய்வை சிறப்புக் குழுவினர் செவ்வாக்கிழமை முடித்த நிலையில், மணல் குவாரிகள் குறித்த ஆவணங்களைப் பரிசீலிப்போம் என ஆய்வுக் குழுவின்  தலைவர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறையை மீறி தாது மணல் அள்ளப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவினர் முதல் கட்டமாக கடந்த 12-ம் தேதி முதல் மூன்று நாள்கள் தங்களது ஆய்வுப் பணிகளை முடித்தனர்.

    இந்நிலையில், வருவாய்த் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான சிறப்புக் குழுவினர் தங்களது இரண்டாம் கட்ட கள ஆய்வை செவ்வாய்க்கிழமை மாலையுடன் முடித்தனர்.

    தாது மணல் குவாரிகள் உரிய அனுமதி பெற்று நடைபெறுவதாகவும், அவர்கள் மீது தவறு ஏதும் இல்லை என்றும் 500-க்கும் மேற்பட்டோர் ககன்தீப் சிங் பேடியிடம் மனு அளித்தனர். தங்களுக்கு பாதிப்பு இருப்பதாக மீனவர்கள் பலரும் மனு அளித்தனர்.

    மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை பொதுமக்களிடம் இருந்து ககன்தீப் சிங் பேடி மனுக்களை பெற்றார். அப்போது, மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார் மட்டும் உடனிருந்தார்.

    மனுக்கள் அளித்தவர்களிடம் அவர்களது முகவரி மற்றும் செல்போன் எண்களையும் தவறாமல் எழுதுமாறு ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வை முடித்துள்ளோம். தாது மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்ட பகுதி மீனவர்கள் மற்றும் இதர மக்களிடம் கருத்துகளைக் கேட்டு உள்ளோம்.

    இதேபோல, தாது மணல் உரிமையாளர்களிடமும் சில ஆவணங்களைக் கேட்டுப் பெற்றுள்ளோம். மேலும், சில ஆவணங்களை வழங்குமாறும் கேட்டுள்ளோம்.

    இந்த ஆவணங்களை முழுமையாகப் பரிசீலிப்போம். தேவையின் அடிப்படையில் மேலும் ஆவணங்களைக் கேட்டுப் பெறுவோம்

    என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai