அரசின் திட்டங்கள் எளிதாக மக்களைச் சென்றடைய வேண்டும்
By கோவில்பட்டி, | Published on : 23rd August 2013 04:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரசின் திட்டங்கள் அனைத்தும் எளிதாக மக்களிடம் சென்றடைய ஊராட்சித் தலைவர்கள் செயலாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் ஊராட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தலைமை வகித்தார்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவி பேச்சியம்மாள், திட்ட இயக்குநர் பெல்லா, உதவி இயக்குநர் (தணிக்கை) லூர்துமேரி, உதவி திட்ட அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், இந்துபாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள், பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், பண்ணைக் குட்டம் அமைத்தல், ஊராட்சித் தலைவர்களின் பங்கு, முழு சுகாதாரத் திட்டம், ஊராட்சித் தலைவர்களால் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் ஆகியவை குறித்து ஊராட்சித் தலைவர்களிடம் மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார்.
மேலும், அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் மக்களைச் சென்றடையும் வகையில், ஊராட்சித் தலைவர்கள் செயலாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
கோவில்பட்டி ஒன்றியத்தில் 2012 - 2013-ம் ஆண்டு பசுமை வீடுகள் திட்டத்துக்கு 190 வீடுகள் ஒதுக்கப்பட்டன. அதில் 12 வீடுகளின் கட்டுமானப் பணிகள் மட்டுமே முடிவடையாமல் உள்ளது. 2013 - 2014-ம் ஆண்டு 199 வீடுகள் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 2012 - 2013-ம் ஆண்டில் 325 வீடுகள் கட்டப்பட்டது. 2013 - 2014-ம் ஆண்டு 223 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதில் 178 வீடுகளின் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதில், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) செல்வராஜ் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து ஊராட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
ஒன்றிய கவுன்சிலர்கள் மனு:
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவியின் கணவர் நிர்வாகத்தில் தலையிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் ஒன்றிய கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.