Enable Javscript for better performance
\\\"வறட்சி நிவாரணத்தொகையில் முறைகேடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "வறட்சி நிவாரணத்தொகையில் முறைகேடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும்'

    By தூத்துக்குடி  |   Published on : 23rd August 2013 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு வழங்காமல் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் எம். ரவிக்குமார் தலைமையில்  நடைபெற்றது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்து, வேளாண்மைத் துறை துணை இயக்குநர் குருமூர்த்தி, தாமிரவருணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் முத்துப்பாண்டி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும், சொட்டுநீர்ப் பாசனத்துக்கு மானியம் வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் உரிய முறையில் பதிலளிக்க மறுப்பதாக விவசாயிகள் சிலர் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த ஆட்சியர் எம். ரவிக்குமார், சொட்டுநீர் பாசனத்துக்கு 100 சதவீத மானியம் வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் எந்தவித தாமதத்தையும் அதிகாரிகள் செய்யக்கூடாது என்றார்.

    வறட்சி நிவாரணத்தொகை வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் பலர் குற்றம்சாட்டினர்.

    மாவட்டத்தில் விவசாயம் செய்யாதவர்கள் பலருக்கும், தரிசு நிலத்தின் உரிமையாளர்களுக்கும் அதிகாரிகள் நிவாரணத்தொகையை வழங்கியுள்ளனர் என விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும், விவசாயி குருசாமி பேசுகையில், தனக்கு 26 ஏக்கருக்கு கணக்கெடுக்கப்பட்டு 10 ஏக்கருக்கு மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    இதற்கு பதிலளித்த ஆட்சியர் எம். ரவிக்குமார், இதுவரை நிவாரணத் தொகை கிடைக்காத விவசாயிகள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.  இரண்டாம் கட்டமாக வழங்கப்படும்போது கிடைக்காதவர்களுக்கு பணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார்.

    அப்போது குறுக்கிட்ட விவசாயிகள் கணபதிராமன், ராஜேந்திரன், கே.பி. பெருமாள், மாரியப்பன், குருசாமி ஆகியோர் சில இடங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளபோதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதேபோல, பட்டா மாறுதல் தொடர்பாக மனு கொடுத்து 6 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் சிலர் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த ஆட்சியர், பட்டா மாறுதல் தொடர்பான மனு மீது ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாணை உள்ளது.

    எனவே, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது பட்டா மாறுதல் தொடர்பாக அளிக்கப்படும் மனு மீது அடுத்த கூட்டம் நடைபெறும் ஒருமாதத்துக்குள் உரிய பதிலை அதிகாரிகள் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    கூட்டத்தின்போது, நீர்வள நிலவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு நிலக்கடலை விதை உற்பத்தியாளர் சங்கங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் சுழல் நிதி வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai