Enable Javscript for better performance
\\\"தகுதியுள்ள அனைவருக்கும் செப்.30-க்குள் பட்டா வழங்கப்படும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "தகுதியுள்ள அனைவருக்கும் செப்.30-க்குள் பட்டா வழங்கப்படும்'

    By கோவில்பட்டி  |   Published on : 24th August 2013 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டா கேட்டு விண்ணப்பம் அளித்தால், தகுதியான அனைவருக்கும் செப்.30-ம் தேதிக்குள் பட்டா வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்தார்.

    எட்டயபுரம் வட்டம், பேரிலோவன்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

    இம்முகாமில் கல்வி உதவி, திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை என 89 நபர்களுக்கு ரூ.8,67,200 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும், ஆதிதிராவிட பழங்குடியினர் 3 பேருக்கு தையல் இயந்திரங்களையும், 12 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 15 பேருக்கு பட்டா மனை மாறுதல்கள், புதுவாழ்வு திட்டத்தின் மூலம் 6 பேருக்கு கணினி பயிற்சி சான்றிதழ்கள், 3 பேருக்கு ஓட்டுநர் பயிற்சி உரிமம், 2 பேருக்கு ஆடு வளர்க்க தனி நபர் கடனாக தலா ரூ.12ஆயிரம் என மொத்தம் 130 பேருக்கு ரூ.9,05,600  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கிப் பேசியதாவது: ஏழை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. 19.3.2013-ல் தொடங்கப்பட்ட அம்மா திட்டம், 431 வருவாய் கிராமங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில், 320  கிராமங்களில் இத்திட்டம் முடிவடையப் பெற்று, 60,715 மனுக்கள் பெறப்பட்டு, 30,113 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

    தமிழக முதல்வர் இந்த ஆண்டு 2 லட்சம் பேருக்கு பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளார். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டா கேட்டு விண்ணப்பம் அளித்தால், தகுதியான அனைவருக்கும் 30-9-2013-க்குள் பட்டா வழங்கப்படும்.

    மேலும், தகுதியானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கவும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுவதற்கும் சிறப்பு முகாம்கள் நடத்தி, தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கப்படும்.

    கல்விக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்த்திடும் நோக்கில், வங்கியாளர்கள் கலந்து கொள்ளும் கல்விக் கடன் சிறப்பு முகாம் ஆக.31 மற்றும் செப்.7-ல் ஊராட்சி ஒன்றிய அளவில் நடத்தப்படவுள்ளது.

     இதில் ரூ.4 லட்சம் வரை எந்தவித சொத்து ஜாமீன் இல்லாமலும், ரூ.7.5 லட்சம் வரை தனி நபர் ஒருவர் ஜாமீனிலும் கடன் வழங்கப்படும் என்றார்.

    இதில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் உமாமகேஸ்வரி, பேரிலோவன்பட்டி ஊராட்சித் தலைவர் காளிராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெல்லா, மாவட்ட சமூக நல அலுவலர் முத்துநாயகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மனோகரன் உள்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் கமலா வரவேற்றார். எட்டயபுரம் வட்டாட்சியர் ஜெயராணி நன்றி கூறினார். 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai