Enable Javscript for better performance
கூட்டுறவு இணைப் பதிவாளரைக் கண்டித்து ரேஷன்கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு இணைப் பதிவாளரைக் கண்டித்து ரேஷன்கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் மறியல்

    By கோவில்பட்டி,  |   Published on : 28th August 2013 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளரைக் கண்டித்து கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடை ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடையை திறக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கூட்டுறவு நியாயவிலைக் கடை ஊழியர்கள் மீது விரோதப் போக்கை கடைப்பிடித்து வரும் கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளரைக் கண்டித்தும், பொது விநியோகத் திட்டத்துக்கு குந்தகம் விளைவித்து வரும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கூட்டுறவு நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் ரமேஷ், மண்டல துணை வட்டாட்சியர் தெய்வகுருவம்மாள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், கூட்டுறவு சங்கத் துணைப் பதிவாளர் தங்கள் கோரிக்கை குறித்துப் பேசினால் தான், பணிக்குச் செல்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

    அதையடுத்து, கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதில், கோரிக்கைகளை நிறைவேற்ற துணைப் பதிவாளர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளதை போராட்டக் குழுவினரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    மறியல்: மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தினரின் வேலை நிறுத்தத்தினால், கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் உள்ள மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகம் நடைபெறவில்லை.

    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மண்ணெண்ணெய் வாங்க நின்று கொண்டிருந்த பெண்கள், மண்ணெண்ணெய் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    சம்பவ இடத்துக்கு சென்ற கோவில்பட்டி வட்டாட்சியர் ரமேஷ், காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சுமார் 15 நிமிடம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai