Enable Javscript for better performance
ஒருங்கிணைந்த பஸ் நிலையம்: இடத்தை தேர்வு செய்ய தனியார் நிறுவனத்துக்கு அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    ஒருங்கிணைந்த பஸ் நிலையம்: இடத்தை தேர்வு செய்ய தனியார் நிறுவனத்துக்கு அனுமதி

    By தூத்துக்குடி,  |   Published on : 30th August 2013 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் முதல்வர் அறிவித்த ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கான இடத்தை தேர்வு செய்ய தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என, வியாழக்கிழமை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் எல். சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

    தூத்துக்குடி மாநகராட்சி அவசரக் கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது.

    துணைமேயர் பி. சேவியர், ஆணையர் சோ. மதுமதி முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும், சிவந்தாகுளம் பகுதியில் மாநகராட்சி நூலகம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ரேஷன் கடை கட்ட அனுமதி வேண்டி தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    திமுக கவுன்சிலர் பாலசுப்பிரமணியன்: நூலகம் அருகே ரேஷன் கடை கட்டுவதால் பிரச்னை ஏற்படும். சம்பந்தப்பட்ட இடத்தில் மேயர் ஆய்வு செய்தபிறகு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

    திமுக கொறடா கோட்டுராஜா: மின்வாரியத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் செலுத்தவேண்டிய மின் கட்டணப்பாக்கி எவ்வளவு உள்ளது?. மின் சிக்கனத்துக்காக மாநராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பினார்.

    மேயர்:  தூத்துக்குடி மாநகராட்சியில் நிதி ஆதாரத்தைக் கருத்தில் கொண்டு, அதிக முதலீடு செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு முதல் 10 மாதத்துக்கு பராமரிப்புப் பணிகள் ஒப்பந்தம் வழங்கப்படும் என்றார்.

    அதிமுக கவுன்சிலர் பெரியசாமி:  தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த ஒருங்கிணைந்த பஸ் நிலையம் தூத்துக்குடியில் எங்கு அமைய உள்ளது? என்பது குறித்து மேயர் விளக்கம் அளிக்க வேண்டும்.

    மேயர்: தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு இடமும், மாநகராட்சி சார்பில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டது. இதில், ஒருமித்த கருத்து ஏற்படாததால் அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஒருங்கிணைந்த பஸ் நிலையம் தொடர்பாக ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் பணி தற்போது தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.  இதற்காக செப்டம்பர் 5-ம் தேதி ஒப்பந்தம் கோரப்படவுள்ளது. இதில், தேர்வு செய்யப்படும் நிறுவனம் ஆய்வு நடத்திய பிறகு,அந்த இடம் குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும். அந்த அறிக்கை தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு  ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமையும் இடத்தை அரசு முடிவு செய்யும் என்றார்.

    கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai