வறட்சி நிவாரணப் பிரச்னை: பேச்சுவார்த்தை தோல்வி
By ஸ்ரீவைகுண்டம், | Published on : 31st August 2013 02:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தூத்துக்குடி மாவட்ட வறட்சி நிவாரணத்தொகைகளை உடனடியாக வழங்க வலியுறுத்தி செப்.6-ல் தெய்வசெயல்புரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகளின் அறிவிப்பையடுத்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2012-2013 ஆம் ஆண்டில் மழையில்லாததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். இதையடுத்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்புக் குழு மூலம் ஆய்வு மேற்கொண்டு நிவாரணத் தொகையாக ரூ.104 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிவாரணத்தொகையை விரைவாக கொடுக்க வலியுறுத்தியும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்கு உள்பட்ட பூவானி, சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, எல்லைநாயக்கன்பட்டி, தெய்வச்செயல்புரம், செக்காரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழையை மட்டுமே நம்பி வாழும் கரிசல்காட்டு மானாவாரி விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் செப்.6-ம் தேதி தெய்வசெயல்புரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் காமாட்சிதாசன் தலைமையில் சமாதானக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முடிவு எதுவும் ஏற்படவில்லை.
இதையடுத்து செப்.6-ம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபட்சத்தில் திட்டமிட்டபடி சாலை மறியல் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.