கோவில்பட்டியில் உள்ள கடைகள், ஹோட்டல்கள் மற்றும் தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களை சார் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தலைமையில், வியாழக்கிழமை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டு ஆய்வு செய்தனர்.
நகராட்சி தினசரி சந்தையில் உள்ள பழக்கடை மற்றும் கிட்டங்கிகளுக்குச் சென்று, அங்கிருந்த மாம்பழங்களை அதிகாரிகள் பார்வையிட்டு அவை கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுகிறதா என சோதனையிட்டனர். இதையடுத்து கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள், பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களை பார்வையிட்டு, தரமற்ற பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
பொருள்களின் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, பொருள்களின் அளவு உள்ளிட்டவை கவர்களில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.
மேலும், ஹோட்டல்கள் மற்றும் இனிப்பகங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து காலாவதியான பொருள்களையும், தரமற்ற குளிர்பானங்களையும், ஹோட்டலில் காலாவதியான மாவு மூட்டைகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை அழித்தனர்.
ஆய்வின் போது உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ்சந்திரபோஸ், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மாரிச்சாமி, பொன்ராஜ், முத்துக்குமார், சிவபாலன், நீதிமோகன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் காஜா, முருகன், சீனிராஜ் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.