கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோவில்பட்டி உள்வட்டத்துக்குள்பட்டோருக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியர் அலுவலகத்தில் 10ஆம் தேதி முதல் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 446 பேர் மனு தாக்கல் செய்தனர்.
நகர நிலவரி திட்டத்தின் கீழ் 108 பேருக்கு பட்டா மாறுதல் ஆணையும், 5 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து வழங்கினார்.
இதில், வட்டாட்சியர் முத்துராமலிங்கம், நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியர் மாடசாமி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஜோதி, தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் குருநாதன், துணை வட்டாட்சியர்கள் ராஜ்குமார், பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் நாகராஜன், நில அளவையர் பகவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் நெருக்கடி: ஜமாபந்தியில் மனு அளித்தல், சாதிச்சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெறுதல், புளியம்பட்டி அரசு மாணவர் விடுதி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
இதனால் ஜமாபந்தியில் மனு அளிக்க வந்தோருக்கும், சான்றிதழ் உள்ளிட்ட பணிகளுக்காக வந்தோருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வரிசை ஒழுங்குப்படுத்தப்படாததாலேயே இத்தகைய தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், வருங்காலங்களில் இத்தகைய நேரங்களில் வரிசை ஒழுங்குப்படுத்த காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.