ஓட்டப்பிடாரம் வட்டம், புளியம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நலத் துறை மாணவர் விடுதி காப்பாளரைக் கண்டித்தும், அவரை பணியிடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் அரசு விடுதி மாணவர்கள் வியாழக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
புளியம்பட்டி அரசு ஐ.டி.ஐ.யில் படித்து வரும் மாணவர்கள் சுமார் 60 பேர் ஆதிதிராவிடர் நலத் துறை விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அங்கு முதலாமாண்டு மாணவர் பி.பிரேம்நாத்தை (22), 2ஆம் ஆண்டு மாணவர்கள் கண்ணன், பாலசந்தர், தினேஷ், செல்வமணி, மாரிகுமார் ஆகியோர் புதன்கிழமை தாக்கினராம். காயமடைந்த பிரேம்நாத், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து விடுதியில் தங்கிப் பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவர்கள் சுமார் 20 பேர், பிரேம்நாத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த விடுதிக் காப்பாளர் பாஸ்கரனை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் வியாழக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துவிடம் அவர்கள் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், இதுகுறித்து ஓட்டப்பிடாரம் ஆதிதிராவிடர் நலத் துறை வட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்துபேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, சுமார் 2 மணி நேரத்துக்கு பின் கலைந்து சென்றனர்.